ECONOMYSELANGOR

கோலாலம்பூர், பேராக் பகுதியிலுள்ள எல்லைகளை அளவிடும் பணியில் சிலாங்கூர் தீவிரம்

சிப்பாங், ஜூலை 5- சிலாங்கூர், பேராக், கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய எல்லைப் பகுதிகளை அளவிடுவதற்கான நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த தரை எல்லை நிர்ணய நடவடிக்கை தற்போது பூர்வாங்க கட்டத்தில் உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் நாம் கோலாலம்பூருடன் முதல் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எல்லையை அளவிடும் பணியை மேற்கொள்வோம் என அவர் சொன்னார்.

பேராக்  மாநிலத்தைப் பொறுத்த வரை நாம் வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்துள்ளதோடு அம்மாநில அரசின் மறுமொழிக்காக காத்திருக்கிறோம். சில அம்சங்களில் திருத்தம் செய்ய வேண்டிய சாத்தியமும் உள்ளது என்றார் அவர்.

எல்லை நிர்ணயம் தொடர்பில் சிலாங்கூருக்கும் நெகிரி செம்பிலானுக்கும் இடையே ஒப்பந்தம்  கையெழுத்திடும் சடங்கில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கூட்டரசு பிரதேசம் முன்பு சிலாங்கூரின் ஒரு பகுதியாக இருந்ததால் கோலாலம்பூர்-சிலாங்கூர் எல்லையை நிர்ணயம் செய்யும் பணி சிக்கலானதாகவும் அதிக காலம் பிடிக்கக்கூடியதாகவும் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

எல்லையில் உள்ள வீடமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் இப்பணியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை கையாள்வதற்கான செயல்முறையை மலேசிய அளவை மற்றும் வரைபட இலாகா கொண்டிருக்கும் என நம்புகிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :