ECONOMYSELANGOR

சிலாங்கூர் அரசின் மலிவு விற்பனைத் திட்டம் ஆண்டு இறுதி வரை தொடரும்

கோல லங்காட், ஜூலை 6– கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவு விலையில் விற்பனை செய்யும் திட்டம் இவ்வாண்டு இறுதி வரை தொடர்ந்து நடத்தப்படும்.

ஊராட்சி மன்றங்களின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகள் உள்ளிட்ட இடங்களை இலக்காக கொண்டு இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) விற்பனை பிரிவுத் தலைமை நிர்வாகி முகமது ஃபாசீர் அப்துல் லத்திப் கூறினார்.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை மேற்கொள்வதற்கான இடம் மற்றும் தேதியை நிர்ணயிக்கும் பணியில் தமது தரப்பு ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.

பெரிய மற்றும் சிறிய அளவிலும் வாகனங்கள் மூலமாகவும் இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை நாம் மாநிலத்தின் அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் மேற்கொண்டோம்.

இத்திட்டத்தை இத்துடன் நிறுத்தப் போவதில்லை. இத்தகைய மலிவு விற்பனைத் திட்டத்தை மருத்துவமனைகள் மற்றும் ஊராட்சி மன்றங்களின் கீழுள்ள அரசு நிறுவனங்களில் நடத்துவதற்காக அட்டவணையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார் அவர்.

சிலாங்கூரில் லட்சக்கணக்கானோர் பயனடைய உதவிய இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை தற்போது மத்திய அரசும் பின்பற்றத் தொடங்கியுள்ளதாக சிஜங்காங், தாமான் பெர்வீராவில் நேற்று நடைபெற்ற மலிவு விற்பனையின் போது செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

மத்திய அரசாங்கம் மலேசிய குடும்ப விற்பனை என்ற பெயரில் இதே திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. உண்மையில் தாம் பி.கே.பி.எஸ். மூலம் இந்த திட்டத்தை ஏற்கனவே அமல்படுத்தி விட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :