ECONOMY

தாயைக் குத்திக் கொன்ற தனயனுக்கு ஒரு வாரகால தடுப்புக் காவல்

ஷா ஆலம், ஜூலை 6- மலாக்கா, கம்போங் பாயா லுபோவில் தன் தாயாரை கத்தியால் குத்திக் கொன்ற வேலையில்லா ஆடவரை விசாரணைக்காக ஒரு வாரம் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை போலீசார் பெற்றுள்ளனர்.

போலீசார் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் மஸானா சினின் 38 வயதுடைய அந்த ஆடவரை ஒரு வார காலத்திற்கு தடுத்து வைப்பதற்கான அனுமதி வழங்கினர்.

ஐவர் கொண்ட குடும்பத்தில் மூத்தவரான அந்த ஆடவர் தன் தாயாரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அறிந்த அவரின் சகோதரர் உதவி கோரி கூச்சலிட்டதைத் தொடர்ந்து கிராம மக்கள் அவரை  வளைத்துப் பிடித்தனர்.

ஓய்வு பெற்ற ஆசிரியையான ரோஜிசா முகமது டோம் (வயது 63) என்ற அந்த மூதாட்டி வீட்டின் படுக்கையறையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

சிலையை வழிபட்ட காரணத்தால் தன் தாயாரை படுகொலை செய்யும்படி மர்மக்குரல் காதில் கிசுகிசுத்ததைத் தொடர்ந்து அவ்வாடவர் இந்த கொடூரச் செயலை புரிந்ததாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஜைனோல் சமா முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :