ECONOMYSELANGOR

பாலிங் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி- சிலாங்கூர் அரசு பரிசீலனை

ஷா ஆலம், ஜூலை 6- கெடா மாநிலத்தின் பாலிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து பரிசீலிக்க சிலாங்கூர் அரசு தயாராக உள்ளது.

இவ்விவகாரம் குறித்து இன்று நடைபெறும் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வெள்ளத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட 12 பகுதிகளை சீரமைப்பது தற்போதைய தலையாய பிரச்னையாகும். வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட மரங்களை அப்புறப்படுத்தி மீண்டும் போக்குவரத்தை ஏற்படுத்துவதில் பந்தாஸ் எனப்படும் உடனடி நடவடிக்கை  குழு உதவும் என்று அவர் சொன்னார்.

வெள்ளத்திற்கு பிந்தைய  ஓரிரு நாட்கள் துப்புரவுப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளோம். அதன் பிறகே நிதியுதவி குறித்து பரிசீலனை செய்வோம் என அவர் குறிப்பிட்டார்.

பாலிங் செல்லும் சிலாங்கூர் மாநில வெள்ள உதவிக் குழுவினரை இங்குள்ள அரசு தலைமைச் செயலகத்தில் வழியனுப்பி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநில அரசின் இந்த உதவி நிவாரணக் குழுவுக்கு சிலாங்கூர் பேரிடர் மேலாண்மை பிரிவின் செயலாளர் தலைமையேற்கிறார். இந்த குழுவில் ஊராட்சி மன்றங்களைச் சேர்ந்த 189 அதிகாரிகளும் செர்வ் எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் குழுவின் 20 உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.


Pengarang :