ECONOMYNATIONAL

ஹாஜ்ஜூப் பெருநாளின் போது தினசரி 19 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும்

கோலாலம்பூர், ஜூலை 6- வரும் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படவிருக்கும் ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஜூலை 7 முதல் 12 வரையிலான காலக்கட்டத்தில் தினசரி சுமார் 19 லட்சம் வாகனங்கள்  நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமான நாட்களில் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் 18 லட்சம் வாகனங்களைக் காட்டிலும் வார இறுதியில் வாகன எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும் பயண நேரம் அதிகரிப்பதற்கும் சாத்தியம் உள்ளது என பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஜக்காரியா அகமது ஜபிடி கூறினார்.

ஆகவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக பயண நேர அட்டவணையை பின்பற்றும்படி வாகனமோட்டிகளுக்கு ஆலோசனை கூறிய அவர், நீண்டப் பயணத்திற்கு முன்கூட்டியே திட்மிடும்படியும் கேட்டுக் கொண்டார்.

கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் மற்றும் தெற்கே ஜோகூர் செல்ல விரும்பும் வாகனமோட்டிகள் ஜூலை 7 முதல் 10 வரையிலான நாட்களில் காலை 10.00 மணிக்கு முன்னதாக நெடுஞ்சாலையில் நுழைந்து விடும்படி அவர் ஆலோசனை கூறினார்.

வரும் ஜுலை 10 முதல் 12 ஆம் தேதி வரை பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் மற்றும் ஜோகூரிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கிப் பயணம் மேற்கொள்வோர் காலை 9.00 மணிக்கு முன்னதாக நெடுஞ்சாலையில் நுழைய அறிவுறுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :