ECONOMYNATIONAL

ஹாஜ்ஜூப் பெருநாள் சாலை பாதுகாப்பு இயக்கம்- ஜே.பி.ஜே. தொடக்கியது

கோலாலம்பூர், ஜூலை 7- ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) நேற்று தொடங்கி வரும் 13 ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு இயக்கத்தை நடத்தவுள்ளது.

பெருநாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த சாலை பாதுகாப்பு இயக்கம் நடத்தப்படுவதாக அத்துறையின் திட்டமிடல் மற்றும் நடவடிக்கை பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் அய்டி பாட்லி ரம்லி கூறினார்.

விரைவு பேருந்துகள் மீதான கண்காணிப்பை இலக்காக கொண்ட இந்த சாலை  பாதுகாப்பு இயக்கத்தின் போது அதிக வேகம், பாதுகாப்பு வார்ப்பட்டை அணியாதது, கூடுதல் பாரம் ஏற்றுவது உள்ளிட்ட ஒன்பது குற்றங்கள் மீது தீவிர கவனம் செலுத்தப்படும் என்றார்.

நாடு முழுவதும் உள்ள 28 பஸ் முனையங்களில் பயணிகள் போன்ற தோற்றத்தில் எங்கள் அதிகாரிகள் விரைவு பேருந்து ஓட்டுநர்கள் மீது கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் அதே வேளையில் நெடுஞ்சாலைகளிலும் ஆங்காங்கே  அதிகாரிகள் நிறுத்தி வைக்கப்படுவர் என்றார் அவர்.

லைசென்ஸ் இன்றி அல்லது லைசென்ஸ் மற்றும் சாலை வரி காலாவதியான நிலையில் சாலையைப் பயன்படுத்துவோரின் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் ஜே.பிஜே. ஈடுபடும் என அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக வாகனமோட்டிகள்  கவனமுடன் வாகனத்தைச் செலுத்தும் அதேவேளையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


Pengarang :