ECONOMYNATIONAL

போதைப் பொருள் தயாரிப்புக் கூடத்தில் அதிரடிச் சோதனை- எண்மர் கைது

கோலாலம்பூர், ஜூலை 8- போதைப் பொருள் தயாரிப்புக் கூடமாக பயன்படுத்தப்பட்டு வந்த இங்குள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவல் துறையினர் கடந்த 6 ஆம் தேதி மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் எண்மர் கைது செய்யப்பட்டனர்.

ஜாலான் லாய் யூ சுவியிலுள்ள அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் காலை மணி 7.00 அளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியர் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெல்ஹான் யாஹ்யா கூறினார்.

அந்த தம்பதியரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட  நான்கு சோதனை நடவடிக்கைகளில் வெளிநாட்டு பிரஜைகளான ஒரு பெண் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த சோதனை நடவடிக்கைகளில் 191,693 வெள்ளி மதிப்பிலான மெத்தம்பெத்தமின், மெத்தம்பெத்தமின் பவுடர், மெத்தம்பெத்தமின் சாறு, கெத்தமின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் 1952 ஆம் ஆண்டு அபாயகர  போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

கைது செய்யப்பட்ட 20 முதல் 40 வயது வரையிலான அவர்கள் அனைவரும் நேற்று தொடங்கி ஏழு நாட்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.


Pengarang :