ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களை இணையம் வழி விற்கும் விதிமுறை கடுமையாக்கப்படும்- அமைச்சர்

புத்ரா ஜெயா, ஜூலை 13- முறைகேடுகள் நிகழ்வதைத் தடுப்பதற்காக கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் உதவித் தொகை வழங்கப்படும் பொருள்களை இணையம் வாயிலாக விற்பனை செய்வது தொடர்பான விதிமுறை கடுமையாக்கப்படும்.

இதன் தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்குவது தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை தமது அமைச்சு ஆராய்ந்து வருவதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் உதவித் தொகை வழங்கப்பட்ட பொருள்களின் விற்பனைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்து கொண்ட அவர், பாக்கெட் மற்றும் போத்தல்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் விற்பனை தொடர்பில் இரு இணையத் தளங்களில் வெளியிடப்பட்ட 38 விளம்பரங்களை அகற்றும்படி உத்தரவிடப்பட்டதாகச் சொன்னார்.

இம்மாதம் 1 முதல் 12 வரையிலான காலக்கட்டத்தில் இணைய விற்பனை தொடர்பில் சம்பந்தப்பட்ட தளங்களில் வெளியிடப்பட்டிருந்த முகவரியைக் கொண்டு 18 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு போத்தல் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் பதுக்கலை கண்டு பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :