ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜப்பானில் கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பு- பயணத் திட்டங்கள் ஒத்தி வைப்பு

 தோக்கியோ, ஜூலை 13 - ஜப்பானில் செவ்வாயன்று 76,000 க்கும் மேற்பட்ட புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான சம்பவங்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும். மார்ச் 3 ஆம் தேதிக்குப் பிறகு அந்நாடு முதன் முறையாக 70,000 க்கும் அதிகமான சம்பவங்களை பதிவு செய்துள்ளது.

 ஒகினாவாவின் தென்மேற்கு மாநிலம் உட்பட 12 மாநிலங்களில்   ஒரே நாளில்  3,436 நோய்த்தொற்றுகளும்  நான்கு இறப்புகளும் பதிவு செய்யப்பட்டதாக கியூடோ செய்தி நிறுவனம் கூறியது.

அதிகரித்து வரும் நோய்த் தொற்று சம்பவங்களை கட்டுப்டுத்தும் வகையில்,  குடியிருப்பாளர்களுக்கான நாடு தழுவிய பயண மானியத் திட்டத்தை ஜூலை மாதம் மத்தியில் தொடங்குவதை ஒத்திவைக்க ஜப்பானிய அரசாங்கம்  திட்டமிட்டுள்ளது.

புதிய மானிய திட்டமானது, குடியிருப்பாளர்களிடையே உள்ளூர் பயணத்தை ஊக்குவிப்பதற்காக தற்போது மாநில நிலையில் செயல்படுத்தப்பட்டு வரும்  திட்டத்தின் விரிவாக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 புதிய மானியத் திட்டம் ஒத்திவைக்கப்பட்ட போதிலும் மக்களின் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் சாத்தியத்தை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். 

நேற்று செய்தியாளர் மாநாட்டில் பேசிய  சுகாதார ஜப்பானிய சுகாதார அமைச்சர்  ஷிகேயுகி கோத்தோ, வரவிருக்கும் கோடை விடுமுறை காலத்தில் நோய்த்தொற்றுகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பது  குறித்து கவலை தெரிவித்தார். எனினும், தற்போதைய சூழ்நிலையில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் தேவை என்று நாங்கள் நினைக்கவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

Pengarang :