ECONOMYSELANGOR

 ஷா ஆலம் அரங்கம் காலச் சூழலுக்கேற்ப மறு நிர்மாணிப்பு செய்யப்பட வேண்டும்

ஷா ஆலம், ஜூலை 14– சிலாங்கூர் மாநிலத்தின் புதிய அடையாளச் சின்னமாக விளங்கும் வகையில் கடந்த 1994 ஆம் ஆண்டில் 46 கோடி வெள்ளி செலவில் மிகவும் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்ட ஷா ஆலம் அரங்கம் இன்று பொலிவிழந்து காணப்படுகிறது.

கடந்த முப்பது ஆண்டுகளாக மழை, வெயில் என எல்லா சீதோஷண நிலைகளையும் எதிர்கொண்ட இந்த அரங்கம் 12 முறை மலேசிய கிண்ண இறுதியாட்டத்திற்கான களமாக விளங்கியுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தின் பெருமைக்குரிய அடையாளச் சின்னமாக விளங்கி வந்த இந்த அரங்கம் காலச் சூழலுக்கேற்ப மாற்றத்திற்கு உட்பட வேண்டும் எனக் கூறுகிறார் கால்பந்து துறையில் 25 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளரான முகமது பாரீக்.

ஷா ஆலம் அரங்கை பழுதுபார்ப்பதற்கு மட்டும் 25 கோடி வெள்ளி தேவைப்படும். அந்த அரங்கிற்கு சிகிச்சையளிப்பதை விட முழுமையாக சீரமைப்பது இன்னும் விவேகமான நடவடிக்கையாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.

காலச் சூழலுக்கேற்பவும் எளிதாக பராமரிப்பதற்கு ஏதுவாகவும் 50,000 பேர் வரை அமரக்கூடிய அரங்கை நிர்மாணிப்பது மாநில அரசின் முக்கியமான நோக்கமாக உள்ளது.

இந்த திட்டத்தை அமல்படுத்த கடுமையான ஒரு முடிவை மாநில அரசு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். நடப்பிலுள்ள அரங்கத்தை உடைத்து நடப்பு தேவைக்கேற்ற வகையில் புதிய அரங்கை அமைப்பதும் அந்த முடிவுகளில் அடங்கும்.

வெள்ளையர்களின் கௌரவச் சின்னமாக விளங்கிய வெம்ப்ளி அரங்கம் கடந்த 2002 ஆம் ஆண்டில் உடைக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு புதிய அரங்கம் கட்டப்பட்டதையும் நாம் கருத்தில் கொள்வது அவசியம்.

வரும் 2026 ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படும் எல்.ஆர்.டி. 3 திட்டத்திற்கேற்ப அந்த அரங்கு சார்ந்த பகுதிகளை மேம்படுத்த டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான மாநில அரசு எடுத்துள்ள முடிவை தாம் வரவேற்பதாக முகமது பாரீக் கூறினார்.

ஷா ஆலம் அரங்கை சீரமைப்பதில் தாமதப்போக்கு கடைபிடிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டாலும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு காரணமாக சிரமத்தை எதிர்நோக்கியுள்ள நகர்ப்புற மக்களின் நல்வாழ்வுக்கு அமிருடின் முன்னுரிமை அளிப்பதை காண முடிகிறது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :