ECONOMYHEALTH

நெகிரி செம்பிலானில் 15,225 இன்புளுயென்ஸா போன்ற நோய் சம்பவங்கள் பதிவு

சிரம்பான், ஜூலை 14 – நெகிரி செம்பிலானில் இவ்வாண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 9 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 15,225 இன்புளுயென்ஸா போன்ற நோய் (ஐ.எல்.ஐ.) சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிரம்பான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 4,923 சம்பவங்கள் பதிவான வேளையில் தம்பின் (3,877), ஜெம்போல் (2,255), ஜெலுபு (2,050), கோல பிலா (973), போர்ட்டிக்சன். (824) மற்றும் ரெம்பாவ் (323) ஆகிய மாவட்டங்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளதாக மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல், கூட்டுறவு விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.வீரப்பன் கூறினார்.

இந்த ஆண்டு மாநிலத்தில்  ஒன்பது ஒட்டுமொத்த  ஐ.எல்.ஐ. சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  தீவிர தன்மை கொண்ட நோய்த் தொற்றுகள் எதுவும் இல்லை. இந்நோய் பரவல்  காரணமாக பள்ளிகள் அல்லது மழலையர் பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை என்பதோடு  இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் இன்று  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், நோய்த் தாக்க ஆபத்து அதிகம் உள்ளவர்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் காய்ச்சல், இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் வெளிப்படுத்தினால் விரைந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவும் அதேவேளையில் நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படியும் அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :