ECONOMY

கப்பல் வரத் தாமதம்- லாபுவானில் கடுமையான சீனிப் பற்றாக்குறை

லாபுவான், ஜூலை 14– கப்பல் வருவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் உள்ளூர் தேவையை ஈடுசெய்யும் அளவுக்கு போதுமான அளவு விநியோகம் இல்லாதது ஆகிய காரணங்களால் லாபுவான் தீவில் கடுமையான சீனிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு காரணமாக அந்த தீர்வற்ற தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருள் விலையேற்றத்தைப் போல் சீனி பற்றாக்குறைப் பிரச்னையும் மோசமடையும் சாத்தியம் உள்ளதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் லாபுவான் பிரிவு எச்சரித்துள்ளது.

உள்நாட்டு தேவையை ஈடு செய்யும் வகையில் அத்தீவிலுள்ள மொத்த உற்பத்தியாளர்கள் கூடுதலாக சீனியை கொள்முதல் செய்ய முயன்று வந்த போதிலும் தேவைக்கும் குறைவான அளவு சீனி மட்டுமே கிடைத்து வருவதாக அப்பிரிவின் இயக்குநர் ஜூனைடா அர்பாய்ன் கூறினார்.

தீபகற்ப மலேசியாவிலுள்ள இரண்டு பெரிய சீனி விநியோகிப்பு நிறுவனங்களான ஷா ஆலமிலுள்ள சென்ட்ரல் சுகர் ரிபைனரி, ஜோகூர் மற்றும் பெர்லிசில் உள்ள மலாயன் சுகர் ரிபைனரி ஆகியவற்றிடமிருந்து சீனியை இறக்குமதி  செய்ய லாபுவானிலுள்ள ஒன்பது மொத்த விற்பனையாளர்களுக்கு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

சீனிப் பற்றாக்குறையை மலேசிய அனைத்துலக வர்த்தக மற்றும் நிதி மையம் கடந்தாண்டு முதல் எதிர்நோக்கி வரும் நிலையில் அந்த உணவுப் பொருளின் விற்பனையை கட்டுப்படுத்தும்படி வணிகர்கள் மற்றும் பேரங்காடிகளுக்கு நினைவுறுத்தியுள்ளது.

சுமார் 110,000 மக்கள் தொகையைக் கொண்ட லாபுவான் தீவுக்கு மாதம் தோறும் குறைந்த து 120 டன் சீனி தேவைப்படுகிறது.


Pengarang :