ECONOMYNATIONAL

மக்களவைக் கூட்டத்தில் கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா, வாழ்க்கைச் செலவின அதிகரிப்புக்கு முன்னுரிமை

கோலாலம்பூர், ஜூலை 15- இம்மாதம் 18 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும் 14வது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான இரண்டாம் கூட்டத் தொடரில் கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா தாக்கல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமையும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதை தடுக்க வகை செய்யும் 2022 அரசியலமைப்புச் சட்ட மசோதா (திருத்தம்)(எண்.3) வழிகாட்டுதலுக்காக வரும் திங்களன்று உறுப்பினர்கள் மேசையில் வைக்கப்படும் அல்லது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவை சபாநாயகரின் விவேகத்திற்குட்பட்டு வரும் ஜூலை 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் என்று நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துவாங்கு ஜாபர் கூறினார்.

உருமாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்காக கூட்டரசு அரசாங்கமும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்களில் கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா தாக்கலும் ஒன்றாகும்.

இது தவிர, வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு விவகாரமும் மக்களவை விவாதத்தில் இடம் பெறும் முக்கிய அங்கமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று பாஸ் கட்சி பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்த ஒன்பது சட்ட மசோதாக்கள் இந்த கூட்டத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புக்கு விடப்படும்.

இதனிடையே, பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மானுக்கு பதிலாக புதிய மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் திட்டம் இம்முறையும் நிறைவேறுமா? அல்லது மறுபடியும் ஒத்தி வைக்கப்படுமா? என்பதும் இக்கூட்டத் தொடரில் தெரிந்து விடும்.

துணை சபாநாயகர் பதவியை டத்தோஸ்ரீ அஸாலினா கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் ராஜினாமா செய்தார். எனினும் புதிய துணை சபாநாயகர் நியமனம் பெறும் வரை அவர் தற்காலிகமாக அப்பொறுப்பை வகித்து வருகிறார்.


Pengarang :