ECONOMYNATIONAL

கண்ணியம் காப்பீர்-பகைமைப் போக்கைத் தவிர்ப்பீர்- கெஅடிலான் உறுப்பினர்களுக்கு வான் அஜிசா வேண்டுகோள்

ஷா ஆலம், ஜூலை 15- கெஅடிலான் தேர்தலில் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்ட போதிலும் கண்ணியத்தை காப்பதில் உறுதியுடன் இருக்கும்படி கட்சி உறுப்பினர்களை டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெற்றி தோல்வி என்பது போட்டியின் மரபாகும். எது எப்படி இருப்பினும் அனைத்து உறுப்பினர்களும் நடத்தை, பண்பு, உயர் நெறி மற்றும் கௌரவத்தை தொடர்ந்து கட்டிக்காத்து வர வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் ஆலோசக மன்றத் தலைவருமான அவர் அவர் சொன்னார்.

நானும் தோல்வி கண்டுள்ளேன். சக போட்டியாளருடன் பகைமை பாராட்ட வேண்டும்  என்பது இதன் பொருளல்ல. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தேர்தல் முடிந்தவுடன் நமது ஆற்றலை ஒன்று திரட்டி கட்சியின் அடிப்படை போராட்டத்திற்கு தோள் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாம் பகைமைக் கொள்ளக்கூடாது. நாம் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். விருப்பம் இல்லை என்றால் கட்சியிலிருந்து தாராளமாக வெளியேறலாம். ஆனால் நீறு பூத்த நெருப்பு போல் உள்ளே இருந்து கொண்டு பகைமையை மூட்டக் கூடாது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்கியதை நாமே அழித்து விட வேண்டாம் என்று அவர் கூறினார்.

இன்று இங்கு கெஅடிலான் கட்சியின் 16வது மகளிர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் முன்னாள் துணைப் பிரதமருமான அவர் நா  தழுதழுத்தக் குரலில் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.


Pengarang :