ECONOMYNATIONAL

14வது பொதுத் தேர்தலில் வென்ற அனைத்து தொகுதிகளிலும் மீண்டும் போட்டி- கெஅடிலான் அறிவிப்பு

ஷா ஆலம், ஜூலை 15– கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் 14வது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக கெஅடிலான் கட்சி கூறியுள்ளது.

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகளுடன் தாங்கள் பேச்சு நடத்தி வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சியின் சந்திப்பு நிகழ்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இன்று இங்கு கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பெரிய மற்றும் வலுவான கட்சியாக கெஅடிலான் விளங்குவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைப் பெறுவது குறித்து தாங்கள் ஹராப்பான் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை கெஅடிலான் தீர்மானித்துள்ள போதிலும் கூட்டணி கட்சிகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அது இறுதி செய்யப்படும் என்றார் அவர்.

தீபகற்ப மலேசியாவில் ஹராப்பான் கூட்டணி குறைந்த பட்சம் 68 தொகுதிகளையும் அதிகப்பட்சம் 95 தொகுதிகளையும் பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் எளிதாக வெற்றி பெற முடியாது. ஆகவே, எதிர்க்கட்சி அணியில் பலம் பொருந்திய கட்சியாக கெஅடிலான் விளங்குவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த 2018 ஆம் நடைபெற்ற  பொதுத் தேர்தலில்  கெஅடிலான் கட்சி 48 நாடாளுமன்றத் தொகுதிகளையும் 73 சட்டமன்றத் தொகுதிகளையும் வென்றது.


Pengarang :