ECONOMYSELANGOR

இலக்கவியல் கார் நிறுத்தக் கட்டண முறை மீது பயனீட்டாளர்கள் மனநிறைவு- இங் ஸீ ஹான் தகவல்

ஷா ஆலம், ஜூலை 15- மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட இ-கூப்பன் எனப்படும் இலக்கவியல் கார் நிறுத்த கட்டண முறை சீரான முறையில் அமலாக்கம் கண்டு வருவதோடு பயனீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி தொடங்கி இந்த இ-கூப்பன் முறை அமல்படுத்தப்பட்டது முதல் பொதுமக்கள் புகார் தெரிவித்தது தொடர்பில் எந்த தகவலையும் இ-கூப்பன் ஏஜெண்டுகளிடமிருந்து தாங்கள் பெறவில்லை என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

பொது மக்களுக்கு உதவுவதற்காகவும் எஸ்.எஸ்.பி. எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் செயலி முறையின் சீரான அமலாக்கத்தை உறுதி செய்வதற்காகவும் மாநிலம் முழுவதும் 455 இ-கூப்பன் ஏஜெண்டுகளைத் தாங்கள் நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கட்டண முறை தொடர்பில் இதுவரை எந்த புகாரும் வரவில்லை. பொதுமக்கள் இந்த கட்டண முறைக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டதால் இதன் அமலாக்கத்தில் பெரிதாக எந்த பிரச்னையும் எழவில்லை என்று அவர் சிலாங்கூர் கினியிடம் கூறினார்.

இதுவரை மொத்தம் 49,680 வெள்ளி மதிப்பிலான காகித கூப்பன்களின் கார் நிறுத்த கட்டணத் தொகை இ-கூப்பன்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி தொடங்கி மாநிலத்திலுள்ள  அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் இ-கூப்பன் எனும் இலக்கவியல் கார் நிறுத்தக் கட்டண முறை அமல் செய்யப்பட்டது.


Pengarang :