ANTARABANGSAECONOMYNATIONAL

லுவாஸ் துரித நடவடிக்கையால் சுங்கை சிலாங்கூரில் நீர் மாசுபாடு தடுக்கப்பட்டது

ஷா ஆலம், ஜூலை 16- லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்தின் துரித நடவடிக்கையால்  சுங்கை சிலாங்கூரில் நீர் துர்நாற்றப் பிரச்னை ஏற்படுவது தடுக்கப்பட்டது.

புக்கிட் பெருந்தோங் தொழில்பேட்டைப் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் 12 மூட்டை கார்பன் தூள் மூட்டைகளை அடுக்கி வைத்ததன் மூலம் நீர் மாசுபாடு தடுக்கப்பட்டதாக லுவாஸ் கூறியது.

அந்த தொழில்பேட்டைப் பகுதியில் தீ ஏற்பட்ட இடத்திலிருந்து  வழிந்தோடிய நீர் கால்வாய் வழியாக ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு பகுதியில் கலந்து நீர் மாசுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

நேற்று மாலை 4.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து சுங்கை செம்பா மற்றும் சுங்கை சிலாங்கூரில் மாசுபாடு தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன என்று அந்த வாரியம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

நீர் வளங்கள் மாசுபடுவதிலிருந்து தடுப்பதை உறுதி செய்வதற்காக தீவிபத்து நிகழ்ந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் சோதனை நடவடிக்கைகளைத் தாங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் அது குறிப்பிட்டது.


Pengarang :