ECONOMYSELANGOR

ஊழலை ஒழிக்காவிட்டால் இலங்கையின் கதி நமக்கும் ஏற்படும்- முகமது சாபு எச்சரிக்கை

ஷா ஆலம், ஜூலை 18- நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல் நடவடிக்கைகளை விரைந்து ஒழிக்காவிட்டால் இலங்கையின் கதிதான் மலேசியாவுக்கும் ஏற்படும் என்று அமானா கட்சியின் தலைவர் முகமது சாபு எச்சரித்தார்.

பொருளாதார நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் இன வேறுபாடின்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பெரும் சிரத்தை எதிர் நோக்க வேண்டி வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலை ஏற்படாமலிருக்க வேண்டுமானால் அடுத்த பொதுத் தேர்தலில் இன வேறுபாடின்றி  அனைத்து மக்களும் ஒன்றுபட்டு புத்ரா ஜெயாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு துணை புரிய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் நேற்று நடைபெற்ற மலேசிய இந்தியர் குரல் (எம்.ஐ.வி.) அமைப்பின் ரோட் ஷோ எனப்படும் பிரசார பயணத் தொடர் நிகழ்வில் உரையாற்றிய போது கோத்தா ராஜா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இதனைத் தெரிவித்தார்.

மைக்கா ஹோல்டிங்ஸ் ஊழல் இந்திய சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக தேர்தலில் தங்கள் தலைவர்களை அச்சமுதாய மக்கள் தண்டித்து விட்டனர். மசீசவிலும் பெர்சத்து கூட்டுறவுக்  கழக ஊழல் நிகழ்ந்தது. அதனால் கடந்த 1986 ஆம் ஆண்டுத் தேர்தலில் அக்கட்சி கடும் பின்னடைவை எதிர்நோக்கியது.

நாட்டையே உலுக்கும் வகையில் 1எம்டிபி ஊழல் நிகழ்ந்துள்ளது. சுமார் 5,200 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட இந்த உலகின் மிகப்பெரிய ஊழல் தொடர்பில் மலேசியாவிலும் அமெரிக்காவிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த ஊழலில் அனைத்து இனத்தினரும் சம்பந்தப்பட்டிருந்தாலும் மலாய்க்காரர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆகவே அடுத்த பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி அரசாங்கத்தை மலாய் சமூகம் நிராகரிக்க வேண்டும்.

ஊழல் விவகாரத்தை அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் இலங்கையின் நிலைதான் நமக்கும் ஏற்படும். அதன் பாதிப்பை அனைத்து இனங்களும் எதிர்நோக்க வேண்டி வரும் என்று முகமது சாபு எச்சரித்தார்.

ஊழல் குறியீட்டுப் பட்டியலில் மலேசியா 11 புள்ளிகள் கீழிறங்கி 62 இடத்திற்கு சென்றதை சுட்டிக்காட்டிய அவர், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டிலுள்ள அனைவரும் இன வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.

பொருளாதாரத்தில் இந்தோனேசியா நம்மை முந்திச் சென்று விட்டது. வியட்னாம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கம்போடியா போன்ற நாடுகளுடன் நாம் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றார் அவர்.


Pengarang :