ECONOMYNATIONALPENDIDIKAN

மலேசியர்களில் 5.8 விழுக்காட்டினர் பள்ளிக்குச் சென்றதில்லை- ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ஷா ஆலம், ஜூலை 18- நாட்டிலுள்ள 3 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையில் 5.8 விழுக்காட்டினர் பள்ளிக்கு அறவே சென்றதில்லை அல்லது கல்வியை பாதியிலே கைவிட்டுள்ளனர்.

மலேசிய புள்ளி விபரத்துறை கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் அந்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெரித்தா ஹரியான் தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் கல்வித் தரம் குறித்து அறிந்து கொள்வதற்காக 15 முதல் 64 வயது வரையிலானவர்களிடம் மலேசிய புள்ளிவிபரத்துறை அந்த ஆய்வினை மேற்கொண்டதாக அந்த ஏடு கூறியது.

நாட்டு மக்களில் 72.1 விழுக்காட்டினர் எஸ்.பி.எம். தேர்வுக்குப் பின்னர் கல்வியைத் தொடர விரும்பவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக உள்ளது என்று மலேசிய உற்பத்தி கழகத்தின் உற்பத்தி மற்றும் போட்டி ஆற்றல் பிரிவின் இயக்குநர் முகமது முஸாபர் அப்துல் ஹமிட் கூறினார்.

இந்த எண்ணிக்கை நாட்டின் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். காரணம், வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் போது அந்த வேலைகளை நிரப்புவதற்குரிய தகுதி உள்நாட்டு இளைஞர்களிடம் இருக்காது என்று அவர் சொன்னார்.

பள்ளிக்குச் செல்லாதவர்களில் பெரும்பாலோர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இது தவிர பூர்வக்குடியினரோடு சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களில் 22.1 விழுக்காட்டு மாணவர்கள் மட்டுமே உயர்கல்வியைத் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :