ECONOMYNATIONAL

துணை சபாநாயகருக்கான தேர்தல் நான்காவது முறையாக ஒத்தி வைப்பு

கோலாலம்பூர், ஜூலை 18- டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மானுக்கு பதிலாக புதிய துணை மக்களவை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நான்காவது முறையாக இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

இன்றைய அவை நிகழ்வின் முதல் அங்கமாக இடம் பெற்றிருந்த துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதை அடுத்த கூட்டத் தொடருக்கு ஒத்தி வைப்பதற்கான தீர்மானத்தை பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்ற மற்றும் சட்டவிவகாரங்கள்) டத்தோஸ்ரீ வான் ஜூனைடி வான் ஜாபர் தாக்கல் செய்தார்.

இந்த தீர்மானத்தை நாடாளுமன்ற மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோ மாஸ் எர்மியாத்தி வழி மொழிந்தார். உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துணை சபாநாயகர் பதவியை டத்தோஸ்ரீ அஸாலினா கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதி ராஜினாமா செய்தார். எனினும், அப்போது முதல் அவர் தற்காலிகமாக இந்த பதவியை வகித்து வருகிறார்.

துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதை ஒத்தி வைப்பதற்கான தீர்மானம் வான் ஜூனைடியால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி முதன் முறையாக தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு அக்டோபர் 5 ஆம் தேதி துணையமைச்சர் எர்மியாத்தி இந்த ஒத்தி வைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இரு துணை சபாநாயகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தின் 57(1)(பி) விதி கூறுகிறது.


Pengarang :