ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் 28வது நோய்த் தொற்று வாரத்தில் கோவிட்-19 எண்ணிக்கை 23.4 விழுக்காடு அதிகரிப்பு

கோலாலம்பூர், ஜூலை 18– இம்மாதம் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான 28வது நோய்த் தொற்று வாரத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.4 விழுக்காடு அதிகரித்து 26,355 ஆக உயர்ந்துள்ளது.

அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 21,355 ஆக இருந்ததாக சுகாதாரத் துறை  தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடந்த 27வது நோய்த் தொற்று வாரத்தில் 30 ஆக இருந்த இறக்குமதி கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 28வது வாரத்தில் 26.6 விழுக்காடு உயர்ந்து 38 ஆகப் பதிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

நோயிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கடந்த 28வது வாரத்தில் 16.8 விழுக்காடு உயர்ந்து 19,138 ஆக ஆகியுள்ளது. 27வது நோய்த் தொற்று வாரத்தில் இந்த எண்ணிக்கை 16,379 ஆக பதிவானது என்றார் அவர்.

அதே சமயம் இந்நோய்த் தொற்றக்கு பலியானவர்கள் எண்ணிக்கையும் இந்த நோய்த் தொற்று வாரத்தில் 2.6 விழுக்காடு உயர்ந்து 39 சம்பவங்களாக பதிவாகியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இது தவிர, தீவிரமாக உள்ள நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை 18.6 விழுக்காடு உயர்வு கண்டு 38,110 ஆகப் பதிவானது என்றார்.

கடந்த 2020 ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கி கடந்த ஜூலை 16 ஆம் தேதி வரை நாட்டில்  கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 46 லட்சத்து 19 ஆயிரத்து 045 ஆகப் பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்து 40 ஆயிரத்து 717 ஆகும். இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 35,838 ஆக பதிவாகியுள்ள வேளையில் நோய்த் தொற்று மையங்களின் எண்ணிக்கையும் 7,026 ஆக ஆகியுள்ளது என்றார் அவர்.


Pengarang :