ECONOMYNATIONAL

வெ. 2.4 கோடி ஊழல் தொடர்பில் மூவருக்கு தடுப்புக் காவல்- எஸ்.பி.ஆர்.எம். நடவடிக்கை

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19–  சுமார் 2 கோடியே 40 லட்சம் வெள்ளி ஊழல் தொடர்பான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்.) உதவுவதற்காக வங்கி ஒன்றின் துணை நிறுவனத்தின் முன்னாள்  தலைமை செயல்முறை அதிகாரி உள்பட மூவரை இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான அனுமதியை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கியது.

முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரியான 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி, 58 வயது வேலையில்லாத நபர், 53 வயது நிதி ஆலோசகர் ஆகியோரை தடுத்து வைப்பதற்கு புத்ரா ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எஸ்.பி.ஆர்.எம். மனு செய்தது.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் முகமது டினி ஷஸ்வான் அபு சுக்கோர் அம்மூவரையும் ஐந்து நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான அனுமதியை வழங்கினார்.

அம்மூவரும் வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று மாலை 6.00 மணியளவில் எஸ்.பி.ஆர்.எம். அலுவலகம் வந்த போது கைது செய்யப்பட்டனர்.

நிறுவனம் ஒன்றின் 29 கோடியே 40 லட்சம் வெள்ளி கடனுதவி விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்கு  கைமாறாக 2 கோடியே 40 லட்சம் வெள்ளியை அம்மூவரும் கையூட்டு பெற்றதாக கூறப்படுகிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 16(எ)(ஏ) பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Pengarang :