ECONOMYSELANGOR

பாலிங் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் அரசு வெ.100,000 உதவி

பாலிங், ஜூலை 21- இம்மாத தொடக்கத்தில் பாலிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் அரசு ஒரு லட்சம் வெள்ளி நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.

அந்த தொகையில் 30,000 வெள்ளி பாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட வேளையில் எஞ்சியத் தொகை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 314 குடும்பங்களுக்கு அடிப்படை பொருள்களை வழங்கப் பயன்படுத்தப்பட்டன.

மாநில அரசின் சிலாங்கூர்  பென்யாயாங் நிவாரணக் குழுவின் வாயிலாக இந்த உதவி வழங்கப்பட்டது. இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் தலைமையிலான இந்த நிவாரணக் குழுவில் வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், கிராம மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அந்த மூன்று ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பாதிக்கப்பட்ட ஆறு கிராமங்களுக்கு நேரில் சென்று வீட்டுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் போர்வை தலையணை போன்ற பொருள்களை ஒப்படைத்த தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் கூறினர்.

இந்த உதவிப் பொருள் ஒப்படைப்பு பணியில் 12 ஊராட்சி மன்றங்கள் மற்றும் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்புகளைச் சேர்ந்த 150 பேரும் பங்கு கொண்டனர்.

இம்மாதம் 4 ஆம் தேதி சுமார் மூன்று மணி நேரத்திற்கு பெய்த அடை மழை காரணமாக சுங்கை குப்பாங்கில் நீர் பெருக்கெடுத்து சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளப் பேரிடரில் கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழந்ததோடு பல வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.


Pengarang :