ECONOMY

பெட்டாலிங்கில் இன்று நடைபெற்ற சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் 5,000 பேர் பங்கேற்றனர்

 பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற டத்தாரான் போலவர்டில் இன்று நடந்த சிலாங்கூர் பென்யாயாங்  நிகழ்ச்சியில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இன்று காலை 8.00 மணி முதல் இன்று மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில்  ஜிம்னாஸ்டிக், முக ஒப்பனை, கோமாளி நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு, ஒரு நாள் ராணி அலங்காரப் போட்டி உள்ளிட்ட பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

பிரபல பாடகர்களான ஹசாமா மற்றும் எர்னி ஜாக்ரி ஆகியோர் தங்களின் கலைப்படைப்புகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். கே.டி.இ.பி. கழிவு மேலாண்மை நிறுவனம்,ரோடா டாருல் ஏசான், பஸ் ஸ்மார்ட் சிலாங்கூர், இல்திசம் அனாக் இஸ்திமேவா சிலாங்கூர் மற்றும் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்தின் கண்காட்சிகளோடு நாற்பதுக்கும் மேற்பட்ட அங்காடி கடைகளில் பல்வேறு பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நான்காவது பயணத் தொடரை  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று காலை தொடக்கி வைத்தார். மறுசீரமைக்கப்பட்ட பெடுலி ராக்யாட் திட்டம் அதிகமான மக்கள் பயன்பெறும் வகையில் 35 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் அமல்  படுத்தப் பட்டுள்ளது. இதனுடன் இலவச மருத்துவ பரிசோதனைகளும்  மேற்கொள்ளப்  பட்டது.

முன்னதாக, இதே நிகழ்வு தாமான் கோசாஸ் அம்பாங் ஜெயா, டத்தாரன் பந்தாய் மோரிப் கோல லங்காட் மற்றும் ஸ்டேடியம் உத்தாமா கோல சிலாங்கூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.

இந்த மூன்றும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றன. இந்த சிலாங்கூர் பென்யாயாங் பயணத் தொடரின் இறுதி நிகழ்வு ஜூலை 31 ஆம் தேதி கோம்பாக்கில் உள்ள பத்து கேவ்ஸ் பொது மைதானத்தில் நடைபெறும்.


Pengarang :