ECONOMYSELANGOR

பேரிடர் தயார் நிலையை மேம்படுத்த ஏழு மாவட்டங்களுக்கு தகவல் தொடர்பு சாதனங்கள் விநியோகம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25- ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி யூனிட் (எஸ்.எஸ்.டி.யு.) பிரிவிடமிருந்து தகவல் தொடர்பு தொழில்நுட்ப கருவிகளை  மேலும் ஏழு நில மற்றும் மாவட்ட அலுவலகங்கள் நேற்று பெற்றுக் கொண்டன.

பேரிடர்கள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை திறனுடன் கையாள்வதற்கு ஏதுவாக மாவட்ட பேரிடர் நடவடிக்கை மையங்களை இலக்கவியல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக விவேக தொலைக்காட்சி, மடிக்கணினிகள், கணினி உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்தாண்டு வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் நில மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு நாங்கள் வருகை மேற்கொண்டோம். அங்குள்ள வசதிகள் ஷா ஆலமிலுள்ள பேரிடர் நடவடிக்கை மையத்தைக் காட்டிலும் பழையதாகவும் காலத்திற்கு ஒவ்வாத வகையிலும் இருந்ததைக் கண்டோம் என்று அவர் சொன்னார்.

இதன் அடிப்படையில் இந்த உபகரணங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நில அலுவலகங்களுக்கு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். பெட்டாலிங் மாவட்ட நிலையில் நேற்று இங்கு நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் அந்த பொருள்களை அவர் ஒப்படைத்தார்.

பெட்டாலிங், கிள்ளான், கோல லங்காட், கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம், உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக் மாவட்ட மற்றும் நில அலுவலகங்கள் இந்த உபகரணங்களை இந்நிகழ்வில் பெற்றுக் கொண்டன.

அம்பாங் தாமான் கோசாசில் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின் போது உலு லங்காட் மற்றும் சிப்பாங் மாவட்ட மற்றும் நில அலுவலகங்களுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.


Pengarang :