ECONOMYSELANGOR

கோம்பாக்கில் நடைபெறும் சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் பி.கே.பி.எஸ். மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜூலை 26- வரும் ஜூலை 31-ம் தேதி கோம்பாக்கில் நடைபெறும்  ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின் ஒரு பகுதியாக சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) அடிப்படை உணவுப் பொருள் மலிவு  விற்பனையை நடத்தவுள்ளது.

மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த நிகழ்ச்சி, பத்து கேவ்ஸ் பொது மைதானத்தில் நடைபெறும்.

ஜூலை 31 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ‘முழுமையான கல்வி, ஆற்றல்மிக்க இளம் தலைமுறை’ என்ற கருப்பொருளுடன் நடைபெறும்  ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்விற்கு கோம்பாக் வட்டார மக்கள் அழைக்கப்படுகிறார்கள். நான் உங்களை அங்கு சந்திக்கிறேன் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இந்த விற்பனையில் கோழி 15.00 வெள்ளிக்கும் பி கிரேடு கோழி முட்டை ஒரு தட்டு வெ.12.50 க்கும் புதிய இறைச்சி ஒரு கிலோ வெ.35.00  விலையிலும் மீன் கிலோ பத்து வெள்ளிக்கும் கிடைக்கும்.

ஜெலாஜா சிலாங்கூர் பயணத் தொடரின்  ஐந்தாவது பதிப்பாக இந்த கோம்பாக் நிகழ்வு அமைகிறது.

முன்னதாக அம்பாங் ஜெயா தாமான் கோசாஸ்  அம்பாங்  கோல லங்காட் டத்தாரான் மோரிப், கோலா சிலாங்கூர் பிரதான அரங்கம் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய இடங்களில் நடைபெற்றது.


Pengarang :