ECONOMYHEALTHNATIONAL

குரங்கம்மை நோயின் நடப்பு நிலவரத்தை அணுக்கமாக கண்காணிப்பீர்-மருத்துவமனைகளுக்கு உத்தரவு

புத்ரா ஜெயா, ஜூலை 26- குரங்கம்மை நோய் அனைத்துலக நிலையில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய பொது சுகாதாரத்திற்கான அவசர நிலை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து நாட்டில் நடப்பு குரங்கம்மை நோய் நிலவரங்களை அணுக்கமாக கண்காணித்து வரும் அதே வேளையில் அந்நோய் கண்டவர்களை அடையாளம் பணியை தீவிரப்படுத்தும்படி மருத்துவமனைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இம்மாதம் 23 ஆம் தேதி வரை குரங்கம்மை என சந்தேகிக்கப்படும் ஒன்பது சம்பவங்கள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள வேளையில் அவை அனைத்தும் எதிர்மறையான முடிவைத் தந்துள்ளன என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

மலேசியர்கள் அல்லாத சுற்றுப்பயணிகள் மைசெஜாத்ரா செயலியில் உள்ள பாரத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதோடு குரங்கம்மை நோய் தாக்கம் உள்ள நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு தங்கள் உடல் நிலையை கண்காணித்து வரும்படி மைசெஜாத்ரா செயலி வழி தொடர்ந்து அறிவுறுத்தப்படும் என அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள் நாடு திரும்பிய நாள் தொடங்கி 21 தினங்களுக்கு தொடர்ச்சியாக தங்கள் உடல் நிலையை குறித்து தினசரி சுயபரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

காய்ச்சல், சோர்வு, வேர்க்குரு போன்றவை குரங்கம்மை நோய்க்கான தொடக்க அறிகுறிகளாகும். பின்னர் முகத்தில் ஏற்படும் கொப்புளம் உள்ளங்கை மற்றும் அடிபாதத்திற்கும் பிறகு உடல் முழுமைக்கும் பரவும்.

இத்தகைய அறிகுறிகளைக் கொண்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று உடலைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கைரி கேட்டுக் கொண்டார்.


Pengarang :