ECONOMYSELANGOR

மலிவு விலைத் திட்டத்தின் வழி 80,000 பேர் பயனடைந்தனர்- ஆட்சிக்குழு உறுப்பினர் தகவல்

ஷா ஆலம், ஜூலை 26- இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட மக்கள் பரிவு மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி மாநிலத்திலுள்ள சுமார் 80,000 பேர் பயனடைந்துள்ளனர்.

இந்த மலிவு விலைத் திட்டத்தின் வாயிலாக மாநிலத்தின் 60 இடங்களில்  கோழி, முட்டை, உறையவைக்கப்பட்ட மீன், இறைச்சி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் சந்தையை விட குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டதாக நவீன விவசாயம் மற்றும் அடிப்படை உணவுப் பொருள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

மாநிலத்தில் குறிப்பாக பெருநாள் காலத்தில் பொது மக்கள்  அடிப்படை உணவுப் பொருள்களை குறைந்த விலையிலும் தங்கு தடையின்றியும் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த மலிவு விற்பனைத் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

கோழி மற்றும் முட்டை போன்ற பொருள்களுக்கு உதவித் தொகை வழங்குவதன் மூலம் பொருள் விலையை கட்டுப்படுத்துவதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டிருந்தது என நேற்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

உணவுப் பொருள் மலிவு விற்பனைத் திட்டத்தின் சமீபத்திய நிலவரம் குறித்து கம்போங் துங்கு உறுப்பினர் லிம் யீ வேய் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.


Pengarang :