ECONOMYSELANGOR

பி40 குடும்பங்களின் சுமையைக் குறைக்க ஆண்டுக்கு வெ.3,600 நிதியுதவி

ஷா ஆலம், ஜூலை 27– பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மாதம் 300 வெள்ளி அல்லது வருடம் 3,600 வெள்ளி பெறத் தகுதி பெற்றுள்ளனர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வருமானம் ஈட்டுதலும் சமூக சேவையும் குடும்ப வருமானத்தை மையமாக கொண்டுள்ளதோடு வறுமையும் வேலையில்லாப் பிரச்னையும் இன வேறுபாடின்றி அனைத்து நிலைகளிலும் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

ஏழ்மையைக் குறைப்பது அடுத்த ஐந்தாண்டுகளுக்கான முக்கிய குறிக்கோளாக இருக்கும் என்று மாநில சட்டமன்றத்தில் இன்று முதலாவது சிலாங்கூர் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.

முதல் சிலாங்கூர் திட்டத்தின் வியூகத்தில் பிங்காஸ் மாற்றத்திற்கான உந்து சக்தியாக விளங்கும். அதாவது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி மக்களின் நல்வாழ்வை உயர்த்தும் என அவர் சொன்னார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மலேசியாவில் இரண்டாவது உயரிய பயனீட்டாளர் விலை குறியீட்டை பதிவு செய்த மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் அதிக பணவீக்கத்தை பதிவு செய்த மூன்றாவது மாநிலமாகவும் இது திகழ்கிறது என்றார் அவர்.

பிங்காஸ் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 10 கோடியே 80 லட்சம் வெள்ளி நிதியின் வாயிலாக சுமார் 30,000 குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :