ECONOMYSELANGOR

பி.ஜே.டி.லிங்க் நெடுஞ்சாலை- மேம்பாட்டாளரின் அறிக்கையை மாநில அரசு மதிப்பீடு செய்யும்

ஷா ஆலம், ஜூலை 27– பி.ஜே.டி.லிங்க் அடுக்கு நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் அத்திட்டம் தொடர்பில் மேம்பாட்டு நிறுவனம் சமர்ப்பிக்கும் அறிக்கையை மாநில அரசு விரிவாக ஆராயும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மேம்பாட்டாளருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கேற்ப இதுவரை தமது தரப்பு எந்த அறிக்கையையும் பெறவில்லை என்று அவர் சொன்னார்.

இத்திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் மற்றும் விமர்சனங்களுக்கு தீர்வு காண்பதாக மேம்பாட்டாளர்கள் எங்களிடம் வாக்குறுதியளித்தனர். எனினும், அதன் தொடர்பில் எந்த அறிக்கையும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆகவே, இத்திட்டம் தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் அவர்.

நாம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். மேம்பாட்டாளர்கள் மற்றும் அத்திட்டத்தை எதிர்க்கும் பொதுமக்களின் கருத்தை நாங்கள் செவிமடுக்க வேண்டியுள்ளது. தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம். அவர்கள் முறையாக செயல்படாவிட்டால் நாங்கள் அத்திட்டத்தை நிராகரித்து விடுவோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று பி.ஜே.டி. லிங்க் நெடுஞ்சாலை மீதான மாநில அரசின் நிலைப்பாடு குறித்து சுங்கை பீலேக் உறுப்பினர் ரோனி லியு எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.


Pengarang :