ECONOMYNATIONAL

கட்சித் தாவல் தடைச் சட்டம் ஆகஸ்டு 9 ஆம் தேதி மேலவையில் தாக்கல்

கோலாலம்பூர், ஜூலை 29– நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதை தடுக்க வகை செய்யும் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அச்சட்டம் மேலவையில் வரும் ஆகஸ்டு 9 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி இந்த சட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் அமலுக்கு வரும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துவாங்கு ஜாபர் கூறினார்.

மேலவையில் நிறைவேற்றம் கண்டபின்னர் இந்த சட்டம் அமலாக்கம் காணும். அரச ஒப்புதலுக்காக இச்சட்டம் பின்னர் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபாவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மாநில நிலையில் இந்த சட்டத்தை அமல்படுத்துவதா? இல்லையா? என்பதை முடிவு செய்யும் உரிமை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கே வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க வகை செய்யும் சட்டத்தைப் போல்தான் இதுவும். அதனை ஏற்பதும் நிராகரிப்பதும் அந்தந்த மாநிலங்களைப் பொறுத்ததாகும் என்றார் அவர்.

தற்போது இந்த கட்சித் தாவல் தடைச் சட்டத்தை கிளந்தான், சபா, சரவா மற்றும் பினாங்கு ஆகிய நான்கு மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. இன்னும் ஒன்பது மாநிலங்கள் எஞ்சியுள்ளன. அம்மாநிலங்களும் இந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சட்டத்தை அமல் செய்வதை ஊக்குவிப்பதற்காக மாநில அரசுகளுடன் தாம் சந்திப்பு நடத்தவுள்ளதாகவும் வான் ஜூனைடி சொன்னார்.

நேற்று கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா மீதான வாக்கெடுப்பு மக்களவையில் நடைபெற்றது. மொத்தம் உள்ள 220 உறுப்பினர்களில் 209 பேர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த வேளையில் 11 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.


Pengarang :