ECONOMYNATIONAL

ரோன் 95 மானிய விலை பெட்ரோல் மோசடி- இரு ஆடவர்கள் கைது

கங்கார், ஜூலை 30- கங்கார் வட்டாரத்தில் மானியத் தொகை வழங்கப்பட்ட ரோன் 95 ரக பெட்ரோல் மோசடியில் ஈடுபட்டது தொடர்பில் இரு ஆடவர்களை பெர்லிஸ் மாநில உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இங்குள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் நேற்றிரவு 9.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 30 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க அவ்விரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக அமைச்சின் பெர்லிஸ் மாநில இயக்குநர் நோராஸா ஜபார் கூறினார்.

தாங்கள் சோதனை மேற்கொண்ட போது புரோட்டோன் பெசோனா ரக கார் ரோன் 95 ரக பெட்ரோலை நிரப்பிக் கொண்டிருந்த நிலையில் புரோட்டோன் சாகா ரக கார் பிளாஸ்டிக் தோம்புகளில் பெட்ரோலை நிரப்பி முடித்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

புரோட்டோன் பெசோனா கார் உரிமையாளர் காரின் பின்புறம் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட டாங்கியில் ரோன் 95 பெட்ரோலை நிரப்பியிருந்தது தொடக்க கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அதோடு மட்டுமின்றி அந்த காரில் மேலும் ஒரு பிளாஸ்டிக் தோம்பில் ரோன் 95 ரக பெட்ரோலும் புரோட்டோன் சாகா காரில் மூன்று தோம்புகளில் பெட்ரோலும் நிரப்பப்பட்டிருந்ததை தாங்கள் கண்டதாக அவர் சொன்னார்.

விசாரணைக்காக அவ்விரு கார்களையும் தாங்கள் பறிமுதல் செய்துள்ளதாக கூறிய அவர், 1961ம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இதன் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.


Pengarang :