ECONOMYSELANGOR

இவ்வாண்டு மார்ச் வரை வெ.327 கோடி மதிப்பிலான 72 தொழில் துறைத் திட்டங்களுக்கு அனுமதி

ஷா ஆலம், ஆக 1- இவ்வாண்டு மார்ச் மாதம் வரை தொழில்துறை சார்ந்த 72 முதலீட்டுத் திட்டங்களுக்கு மிடா எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த முதலீடுகளின் மொத்த மதிப்பு 327 கோடி வெள்ளியாகும்.

முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய மற்றும் தேர்வுக்குரிய இடமாக சிலாங்கூர் தொடர்ந்து விளங்குவதை உறுதி செய்ய மாநில முதலீட்டு நிறுவனமான இன்வெஸ்ட் சிலாங்கூர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கான விரிவான மேம்பாட்டு வியூகமாக முதலாவது சிலாங்கூர் திட்டம் விளங்குகிறது. மேலும், மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் சொத்துடைமைத் துறைகளை மேம்படுத்த சிலாங்கூர் தங்க முக்கோண சிறப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

சிறப்பான எதிர்காலத்தைக் கொண்ட தொழில்துறைகள் மேலும் வலுப்பெறுவதற்கு ஏதுவாக சிலாங்கூர் உயிரியல் தொழில்நுட்ப நடவடிக்கைத் திட்டம் வரையப்பட்டுள்ளதோடு இரயில் தொழில் துறை மன்றமும் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று இவ்வாண்டிற்கான உத்தேச முதலீடு மற்றும் முதலீட்டு மதிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சுங்கை ஆயர் தாவார் உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Pengarang :