ECONOMYSELANGOR

கட்சித் தாவல் தடைச் சட்டம்- மக்கள் நம்பிக்கையைக் காக்கும் சரியான நடவடிக்கை- சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து

ஷா ஆலம், ஆக 1- நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதை தடுப்பதற்கு ஏதுவாக அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் சரியான ஒரு நடவடிக்கையாகும் என்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வர்ணித்துள்ளனர்.

அரசியல்வாதிகள் சுயநலத்திற்காக கட்சி மாறுவதை இந்த சட்டத் திருத்தம் தடுக்கும் என்று அவர்கள் கூறினர்.

இந்த சட்டத் திருத்தம்  நாட்டின் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கையை காப்பதற்கான அரசியல் யுகத்தின் புதிய நேர்மறையான ஒரு திருப்பமாகும் என புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவய்ரியா ஜூல்கிப்ளி

அரசியல்வாதிகளின் கட்சித் தாவும் நடவடிக்கை அரசாங்கம் மற்றும் கட்சி மீதான மக்களின் நம்பிக்கையை பெரிதும் பாதித்து விட்டது. இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நம்பிக்கைத் துரோகச் செயல்களை தடுக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

இதனிடையே, இந்த சட்டத் திருத்தம் குறித்து கருத்துரைத்த பண்டான் இண்டா உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம், மக்கள் பிரதிநிதிகள் மேலும் பொறுப்புணர்வுடன் தங்கள் கடமையை ஆற்றுவதற்குரிய கட்டாயத்தை இது ஏற்படுத்தியுள்ளது என்றார்.

பண்டான் இண்டா உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம்

தேர்தலில் ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த கட்சியின் சார்பாக போட்டியிடுகின்றனர். தொகுதியில் மேம்பாட்டைக் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையில் மக்களும் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர்.

ஆனால், வெற்றி பெற்றவுடன் கட்சித் தாவி விடுகின்றனர். மக்கள் தங்களுக்கு வழங்கிய அதிகாரத்தை புறந்தள்ளும் பொறுப்பற்றச் செயலாக இது அமைகிறது என அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் அரசியல் வரலாற்றில் கட்சித் தாவல் என்பது புதிதல்ல என்று பந்திங் உறுப்பினர் லாவ் வேங் சான் கூறினார். இந்த செயலைத் தடுப்பதற்கு ஏதுவாக புதிதாக சட்டமியற்றப்பட்டது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டார்.

பந்திங் உறுப்பினர் லாவ் வேங் சான்

கட்சித் தாவல் என்பது நாட்டிற்கும் கட்சிக்கும் நல்லதல்ல. நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டும். கால மாற்றத்திற்கேற்ப இச்சட்டத்தில் தொடர்ந்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :