ECONOMYSELANGOR

தாமான் ஆலம், சுங்கை சொங்காக்கில் அனைத்துலக தரத்திலான குடில்கள் அமைக்கப்படும்

கோம்பாக், ஆக 2– மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா மையங்களில் 13 கோடி வெள்ளி செலவில் அனைத்துலக தரத்திலான தங்கும் குடில்கள் அமைக்கப்படும்.

கோல சிலாங்கூரின் தாமான் ஆலம் மற்றும் உலு லங்காட்டின் சொங்காக்கில் இந்த அத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

தாமான் ஆலமில் சுமார் 80 ஹெக்டர் பரப்பளவில் 300 குடில்களை அமைக்கும் திட்டத்திற்காக 10 கோடி வெள்ளி வரை முதலீடு செய்ய சில தரப்பினர் முன்வந்துள்ளனர். அடுத்தாண்டில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

சுங்கை சொங்காக்கில் மூன்று கோடி வெள்ளியை உட்படுத்திய திட்டம் தொடர்பிலான திட்ட அறிக்கை மாநில ஆட்சிக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
நேற்று இங்குள்ள தாமான் இக்கோ ரிம்பா காமவெல்த் ரிசோர்ட்டில் நடைபெற்ற டூரிசம் சிலாங்கூரின் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த பத்திரிகையாளர் விருதளிப்பு நிகழ்வில் அவர் இதனைக் கூறினர்.

சுற்றுப்பயணிகள் சுற்றுலா மையங்களுக்கு வருவதோடு மட்டுமின்றி அங்கு தங்குவதற்குரிய வசதியையும் ஏற்படுத்தும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என அவர் சொன்னார்.

தற்போது பெரும்பாலான சுற்றுப்பயணிகள் கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா போன்ற இடங்களில் தங்கி பிரசித்தி பெற்ற இடங்களுக்கு சென்று வருகின்றனர் என்றார் அவர்.

அந்தந்த இடங்களில் தரமான தங்கும் விடுதிகளை நிர்மாணிக்கும் பட்சத்தில் சுற்றுப்பயணிகள் குறிப்பாக வெளிநாட்டினர் அங்கு தங்குவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் அவ்வட்டார மக்கள் வருமானம் ஈட்டுவதற்குரிய வாய்ப்பும் கிட்டும் என்று அவர் சொன்னார்.


Pengarang :