ECONOMYNATIONAL

புகையிலை கட்டுப்பாட்டு மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்-அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர், ஆக 2– புகையிலைப் பொருள் மற்றும் புகைத்தல் கட்டுப்பாட்டு மசோதா 2022 நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பார்வைக்கு கொண்டுச் செல்லப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த பரிந்துரை அடங்கிய கடிதம் மக்களவைத் தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு நேற்று அனுப்பப்பட்டதாக போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பில் நிரந்தர விதியின் 54(1) மற்றும் 54(2) பிரிவுகளின் கீழ் மேலவை சபாநாயகர்  டான்ஸ்ரீ அஸார் அஜிசான் ஹருணிடம் தாம் பிரேரணை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் புகையிலைப் பொருள் கட்டுப்பாடு மற்றும் புகைத்தல் தொடர்பான அரசியலமைப்பு அமலாக்கத்தை உட்படுத்தியுள்ளதால் இதன் தொடர்பான விவகாரங்களை மறுஆய்வு செய்வதற்கும் தீவிரமாக ஆராய்வதற்கும் ஏதுவாக இது நாடாளுமன்ற தேர்வுக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தாம் சபாநாயகரிடம் பரிந்துரைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சரின் தலைமையிலான இந்த தேர்வுக் குழுவில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறினார்.

இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் கவனத்திற்கு இந்த மசோதா கொண்டுச் செல்லப்பட வேண்டும் என்ற அன்வாரின் பரிந்துரையை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக கூறினர்.


Pengarang :