ECONOMYSELANGOR

மக்களின் சுமையைக் குறைப்பதில் பிங்காஸ், மலிவு விற்பனைத் திட்டம் பேருதவி- மந்திரி புசார்

ஷா ஆலம், ஆக 2- பொருள் விலையேற்றம் மற்றும் இயற்கைப் பேரிடர் போன்ற பாதிப்புகளிலிருந்து மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துவதற்கு மாநில அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்கள் பெரிதும் துணை புரிகின்றன.

உதாரணத்திற்கு வசதி குறைந்தவர்களுக்கு மாதம் 300 வெள்ளி வழங்க வகை செய்யும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முந்தைய திட்டத்திலிருந்து மேம்படுத்தப்பட்ட இந்த பிங்காஸ் திட்ட அமலாக்கத்திற்கு 10 கோடியே 80 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இ-வாலட் எனப்படும் மின் பணப்பை ஒரு வருடத்திற்கு இந்த தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஓராண்டு காலத்திற்குள் இந்த தொகை செலவிடப்படாவிட்டால் அது அடுத்தாண்டிற்கு கொண்டுச் செல்லப்படும் என்று மாநில சட்டமன்றத்தில் அவர் சொன்னார்.

பண வீக்கம் மற்றும் செலவின அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து செமினி உறுப்பினர் ஜக்காரியா ஹனாப்பி எழுப்பிய  கேள்விக்கு அமிருடின் இவ்வாறு பதிலளித்தார்.

மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக கோழி, முட்டை, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களை மாநில அரசு மலிவு விலையில் விற்பனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :