ECONOMYSELANGOR

சட்டமன்றத் தொகுதிகளை அதிகரிக்கும் பரிந்துரை மீது மாநில அரசு தொடர்ந்து பரிசீலனை

ஷா ஆலம், ஆக 3- சிலாங்கூர் மாநிலத்தில் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பரிந்துரை இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிந்துரையை சாத்தியப் பூர்வமாக்குவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.

சட்டமன்றத் தொகுதிகளை அதிகரிக்கும் விஷயத்தில் மாநில அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே ஒத்துழைப்பு தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது சிக்கல் நிறைந்ததாகவும் சிரமமானதாகவும் உள்ளது. இவ்விவகாரம் தற்போது நிர்வாக அளவில் விவாதிக்கப்பட்டு வருவதோடு விரைவில் உரிய தீர்வு எட்டப்படும் என்று சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது அவர் தெரிவித்தார்.

மாநில அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாகவும் எனினும் இறுதி முடிவை எடுப்பது நாடாளுமன்றத்தைப் பொறுத்ததாகும் என்றும் அவர் விளக்கினார்.

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பற்கு நமக்கு அதிகாரம் உள்ளது. ஆயினும் ஒவ்வொரு எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அவ்வாறு செய்ய இயலும். இருந்த போதிலும் இறுதியில் அதனை அங்கீகரிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என்றார் அவர்.

சிலாங்கூர் சற்று விந்தையான மாநிலமாக உள்ளது. பாங்கி, பெட்டாலிங் ஜெயா உள்ளிட்ட 17 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதனால் தங்கள் கடமையை முறையாக ஆற்றுவதில் மக்கள் பிரதிநிதிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது என்று அவர் சொன்னார்.


Pengarang :