ECONOMYSELANGOR

கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு முதலாவது மலேசியத் திட்டத்தில் தீர்வு-சட்டமன்ற உறுப்பினர் நம்பிக்கை

ஷா ஆலம், ஆக 3- கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களால் ஏற்படும் பிரச்னைகளை முதலாவது சிலாங்கூர் திட்டம் கருத்தில் கொள்ளும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக கோத்தா டாமன்சாரா உறுப்பினர் கூறினார்.

தமது தொகுதியில் தற்போது கம்போங் பூங்கா ராயா மற்றும் லாடாங் சுபாங் ஆகிய இரு வீடமைப்புத்  திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக  ஷாதிரி மன்சோர் தெரிவித்தார்.

லாடாங் சுபாங் திட்டத்தில் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் கம்போங் பூங்கா  ராயா திட்டத்தில் 73 குடும்பங்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னையை எதிர்நோக்கி வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

முந்தைய அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலந்தொட்டு இந்த பிரச்னை நீடித்து வருவதாக கூறிய அவர், இன்று வரை இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வினை காண இயலவில்லை என்றார்.

மாநில சட்டமன்றத்தில் முதலாவது சிலாங்கூர் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கான மாநிலத்தின் மேம்பாட்டை இலக்காக கொண்ட இந்த முதலாவது சிலாங்கூர் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 27 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.


Pengarang :