ECONOMYSELANGOR

சிலாங்கூர் அரசின் பிங்காஸ் திட்டத்தின் வழி சுமார் 21,000 பேர் பயன் பெறுகின்றனர்

ஷா ஆலம், ஆக 3- கடந்த மாதம் 27 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது சிலாங்கூர் திட்டம் மாநில மக்களுக்கு பெரும் அனுகூலத்தை வழங்குவதோடு அவர்களின் நீடித்த வாழ்க்கைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

இந்த ஐந்தாண்டு திட்டத்தில் அடங்கியுள்ள அம்சங்களில் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் வாயிலாக சுமார் 21,000 பேர் மாதம் 300 வெள்ளி உதவித் தொகை வழங்குவதும் அடங்கும்.

அடிப்படை பொருள்களை வாங்குவதற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 63 லட்சம் வெள்ளியை இ-வாலட் வேவ்பேய் வாயிலாக மாதத்தின் முதல் தேதி முதல் 28 ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று தொழில் துறை மற்றும் வாணிக ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

மேலும் 282 பேரின் விண்ணப்பங்கள் தொடர்பில் அடையாளக் கார்டு எண்கள் மற்று கைபேசி எண்களை சரிபார்க்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் முதலாவது சிலாங்கூர் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கான்வென்ஷன் பண்டார் பிந்தார் மற்றும் எக்கோனோமி டிஜிட்டல் சிலாங்கூர் ஆகிய திட்டங்கள் வாயிலாக பத்து லட்சம் அமெரிக்க டாலரை தொடக்க முதலீடாக கொண்ட சூனிகோர்ன் நிறுவனங்களை 100 கோடி அமெரிக்க டாலர் முதலீடு கொண்ட யூனிகோர்ன் நிறுவனங்களாக மாற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.


Pengarang :