ECONOMYSELANGOR

தொழில்முனைவோர் வருமானத்தைப் பெருக்க முதலாவது சிலாங்கூர் திட்டம் உதவும்

ஷா ஆலம், ஆக 4- குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்கு ஏதுவாக தொழில்முனைவோர் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் உதவித் திட்டங்களை பல்வகைப்படுத்துவதற்கும் முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் உரிய கவனம் செலுத்தப்படும்.

வறுமையை ஒழிக்கும் முயற்சிகேற்ப பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை அந்த ஐந்தாண்டு திட்டத்தின் முதலாவது கருப்பொருள் உள்ளடக்கியுள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

ஆறு முதல் 36 மாதங்கள் வரையிலான காலக்கட்டத்தில் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெ. 1,000 முதல் வெ. 10,000 வரை சிறுதொழிலுக்கான கடனுதவி வழங்குவதும் இந்த முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் முதலாவது சிலாங்கூர் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்திட்டத்தின் கீழ் ஒன்பது துறைகளில் வரையறுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை ரோட்சியா கேட்டுக் கொண்டார்.

துறைமுகம், தளவாடம், சுற்றுலா, இலக்கவியல், வான் போக்குவரத்து, வானக பழுதுபார்ப்பு, மின்னியல், மின்சாரம், பொறியியல், ஹலால் தொழில்துறை, விவசாய தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.


Pengarang :