ECONOMYSELANGOR

ஜாலான் எஸ்எஸ்19/7 பகுதியில் வெ.360,000 செலவில் கால்வாய் விரிவாக்கம்

ஷா ஆலம், ஆக 5- திடீர் வெள்ளப் பிரச்னையைச் சமாளிப்பதற்காக ஜாலான் எஸ்எஸ் 19/7 பகுதியில் கால்வாய் விரிவாக்கப் பணிகளுக்காக சுபாங் ஜெயா மாநகர் மன்றம் 360,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் இந்த கால்வாய் விரிவாக்கப் பணிகள் முற்றுப் பெறும் என்று சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் கூறினார்.

இப்பகுதியில் மழை பெய்யும் போதெல்லாம் ஒரு அடி உயரம் வரை வெள்ளம் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் அமைந்துள்ள தேசிய ஆரம்ப சீனப் பள்ளி மற்றும் தேசிய பள்ளி ஆகியவை கடுமையாக பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு இந்த சீரமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்ட அமலாக்க காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு பெற்றோர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

கால்வாய்களை விரிவாக்கம் செய்யும் பணி சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக  எஸ்எஸ் 19/7 சாலை தற்காலிகமாக மூடப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :