ECONOMYSELANGOR

சுங்கை பூலோவிலுள்ள 69 நர்சரி உரிமையாளர்கள் கோல லங்காட்டிற்கு இட மாற்றம்

ஷா ஆலம், ஆக 5- ஜாலான் சுங்கை பூலோவில் நர்சரி எனப்படும் நாற்றுப் பண்ணைகளை நடத்தி வரும் 69 உரிமையாளர்கள் கோல லங்காட், புக்கிட் சங்காங்கிலுள்ள தாமான் அக்ரோ ஸ்மார்ட் சிலாங்கூருக்கு இடமாற்ற செய்யப்படவுள்ளனர்.

இருபது ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் வரும் அக்டோபர் மாதம் முதல் அவர்கள் செயல்படுவர் என பி.கே.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் கூறியது.

சுங்கை பூலோ பகுதியில் அடுக்குச் சாலை நிர்மாணிப்பு மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு வழி விடும் வகையில் இந்த இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அது தெரிவித்தது.

அந்த நாற்றுப் பண்ணையாளர்களுக்கு புதிய பகுதியில் தலா 1,000 சதுர மீட்டர் இடம் வழங்கப்படும். புதிய இடத்திற்கு மாறுவதற்கு அனைத்து பண்ணையாளர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர் அக்கழகம் குறிப்பிட்டது.

நேற்று விஸ்மா பி.கே.பி.எஸ்.சில் நடைபெற்ற நிகழ்வில் புதிய இடத்திற்கான அங்கீகாரக் கடிதங்களை விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் வழங்கினார்.

சம்பந்தப்பட்ட இடத்தை துப்புரவு செய்து, சாலை, வடிகால்,நீர் மற்றும் மின்சார விநியோகத்தை ஏற்படுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பூச்செடி நாற்றுகள் மற்றும் பூச்சாடிகளை விற்பனை செய்வதற்கு பிரசித்தி பெற்ற இடமாக சுங்கை பூலோ நர்சரி பகுதி விளங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :