ECONOMYHEALTHNATIONAL

வழக்கறிஞர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று- அகமது ஜாஹிட் ஊழல் வழக்கு ஒத்தி வைப்பு 

கோலாலம்பூர், ஆக 6- எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் இருவர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து யாயாசான் அக்கால்புடி நிதி மோசடி தொடர்பில் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள மோசடி வழக்கு விசாரணையை இங்குள்ள உயர்நீதிமன்றம் வரும் ஆகஸ்டு 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

ஜாஹிட்டை பிரதிநிதிக்கும் முதன்மை வழக்கறிஞர் ஹிஷ்யாம் தே போ தெய்க் மற்றும் வழக்கறிஞர் முகமது நோ ஆகிய இவரும் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரின் மற்றொரு வழக்கறிஞரான அய்மான் அப்துல் ரஹ்மான் நீதிபதி டத்தோ லோரன்ஸ சீகுவேராவிடம் தெரிவித்தார்.

எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் இருவர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளத் தகவலை நாங்கள் கடிதம் மூலம் நீதிமன்றத்திடம் கடந்த 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தெரிவித்திருந்தோம். இன்றைய வழக்கையும் வரும் ஆகஸ்டு 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தோம் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்த்தரப்பு வழக்கறிஞரின் இந்த கோரிக்கைக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் அப்துல் மாலிக் ஆயோப் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி சிகுவேரா வரும் ஆகஸ்டு 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

யாயாசான் அக்கால்புடி சம்பந்தப்பட்ட 47 குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் உள்ளது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அக்குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தற்காப்பு வாதம் புரியும்படி நீதிமன்றம் ஜாஹிட்டுக்கு கடந்தாண்டு தொடக்கத்தில் உத்தரவிட்டது.


Pengarang :