ECONOMYSELANGOR

முதலாவது சிலாங்கூர் திட்ட அமலாக்கத்தைக் கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் உருவாக்கம்

கிள்ளான், ஆக 8- முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய சில சிறப்பு செயல்குழுக்களை மாநில அரசு அமைத்துள்ளது.

நிலைத்தன்மை மற்றும் சமூக நலன் தொடர்புடைய திட்டங்களின் அமலாக்கத்தை கண்காணிக்கும் செயல்குழுக்கள் சில மாதங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இன்னும் செயலாக்கம் காணாத செயல்குழுக்களுக்கு தனியார் துறைகளின் பங்களிப்பு அல்லது விரிவான விளக்கம் இன்னும் தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

முதலாவது சிலாங்கூர் திட்டம் குறித்து மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக நாங்கள் மாநிலம் முழுவதும் விளக்க கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்தவிருக்கிறோம் என்று சிலாங்கூர் கினியிடம் அவர் குறிப்பிட்டார்.

அந்த கண்காணிப்பு செயல்குழுக்களுக்கு சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர்களும் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிமும் தலைமையேற்பர் என்று அவர் விளக்கினார்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாநிலத்தின் பொருளாதார மற்றும் சமூகவியல் மேம்பாட்டை உறுதி செய்யக்கூடிய முதலாவது சிலாங்கூர் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 27 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மொத்தம் 21,244 கோடி வெள்ளி மதிப்பிலான இந்த திட்டத்திற்கு தேவையான நிதி மாநில அரசு, அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர் மூலம் ஈட்டப்படும்.


Pengarang :