ECONOMYHEALTH

கடும் நோய் குறித்த அச்சத்தினால் இலவச மருத்துவ பரிசோதனைக்கு வந்தேன்- பங்கேற்பாளர் பேட்டி

ஷா ஆலம், ஆக 8- கடும் நோய் குறித்த அச்சம் காரணமாக இலவச மருத்துவ பரிசோதனைக்கு தாம் வந்ததாக தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கூறினார்.

ஆகக் கடைசியாக ஐந்து ஆண்டுகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் மாநில அரசின் இந்த இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்தை பயன்படுத்தி உடலாரோக்கியம் குறித்து சோதனை செய்து கொள்ள தாம் முடிவெடுத்ததாக முகமது ஹைரிஸாம் அப்துல் ஹலிம் (வயது 45) கூறினார்.

நீண்ட காலமாக மருத்துவப் பரிசோதனை செய்யாததால் கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியம் இருக்குமோ என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டிருந்ததாக அவர் சொன்னார்.

வயது அதிகரித்து வரும் காரணத்தால் நோய்த் தாக்கம் கருதி மருத்துவப் பரிசோதனையை நாம் அவசியம் மேற்கொண்டாக வேண்டும். இச்சோதனைகளில் நோய்களுக்கான அறிகுறி தென்பட்டால் விரைந்து சிகிச்சை பெற இயலும் என்றார் அவர்.

தனியார் கிளினிக்குகளில் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கண்டறிய பெரும் தொகையைச் செலவிட வேண்டிய நிலையில் அச்சோதனையை மாநில அரசின் இத்திட்டத்தின் மூலம் இலவசமாக மேற்கொள்ள தாம் முடிவெடுத்ததாக நீரிழிவு நோயாளியான டேனிஸ் லிம் (வயது 49) கூறினார்.

கடந்த ஐந்தாண்டுகளாக  நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் மிகவும் அரிதாகவே அதற்கான சோதனையை மேற்கொண்டு வருகிறேன். இருப்பினும், உணவில் சர்க்கரை அளவைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்து வருகிறேன் என்று அவர் சொன்னார்.

இதனிடையே, கடந்த ஓராண்டு காலமாக எதிர்நோக்கி வரும் முதுகெலும்பு வலி பிரச்னைக்கு நிவாரணம் தேடும் நோக்கில் இந்த இலவச  மருத்துவப் பரிசோதனையில் தாம் பங்கு கொண்டதாக தொழில்முனைவோரான இர்மா அவ்டாலியா (வயது 47) தெரிவித்தார்.

முதுகு வலி தொடர்ந்து இருந்து வந்த போதிலும் கடந்த ஓராண்டு காலமாக இதற்கான சிகிச்சையை நான் மேற்கொள்ளவில்லை. இந்த இலவச மருத்துவப் பரிசோதனையில் பங்கு கொள்ள கடந்த ஜூன் மாதம் நான் பதிவு செய்திருந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர்தான் அதற்கான அழைப்பு கிடைத்தது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :