ECONOMYSELANGOR

பெர்சியாரான இக்கோ கிரேண்டியர் 2- பெர்சியாரான் ஷோரியா இணைப்புச் சாலை நவம்பரில் பூர்த்தியாகும்

கோல சிலாங்கூர், ஆக 8- பெர்சியாரான் இக்கோ கிரேண்டியர் 2 மற்றும் பெர்சியாரான் ஷோரியா இணைப்புச் சாலை வரும் நவம்பர் மத்தியில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 75 லட்சம் வெள்ளி செலவிலான இத்திட்டத்தை இக்கோவேர்ல்ட் நிறுவனமும் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகமும் கூட்டாக மேற்கொண்டு வருவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

வட்டார மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஊராட்சி மன்றங்களின் பொறுப்பாகும். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த இணைப்புச் சாலைத் திட்டம் அப்பகுதியில் அதிகரித்து வரும் போக்கு வரத்து நெரிசலை பிரச்னையை தீர்ப்பதில் பெரிதும் துணை புரியும் என்று அவர் தெரிவித்தார்.

நேற்றிரவு இங்கு கார்னிவெல் கோல சிலாங்கூர் 2022 நிகழ்வின் நிறைவு விழாவில் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற இந்த கார்னிவெல் கோல சிலாங்கூர் நிகழ்வை மேன்மை தங்கிய சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நேராஷிகின் பண்டார் புஞ்சா ஆலமில் உள்ள இக்கோ கிரேண்டியரில் அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்தார்.

இக்கோ கிரேண்டியர் மற்றும் டேசா கோல்பீல்ட்ஸ் பகுதியை இணைக்கும் சாலையை கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 1 கோடி வெள்ளி செலவில் மேம்படுத்தும் என்றத் தகவலையும் இங் ஸி ஹான் இந்நிகழ்வில் வெளியிட்டார்.

மேலும், நகராண்மை தற்போது மேற்கொண்டு வரும் கோல சிலாங்கூர் பெக்கான் லாமா, ஜாலான் ராஜா ஜாலிலை அடுக்கு கற்களைக் கொண்டு தரம் உயர்த்தும் பணி வரும் ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி பூர்த்தியாகும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :