ECONOMYSELANGOR

வர்த்தக வாகனங்கள் மீதான சோதனை- ஒருங்கிணைந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த ஜே.பி.ஜே. திட்டம்

கோலாலம்பூர், ஆக 9- வர்த்தக வாகனங்கள் மீதான சோதனையை தீவிரப்படுத்துவதற்கு ஏதுவாக ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) திட்டமிட்டுள்ளது.

சாலை விபத்துகளை குறிப்பாக வர்த்தக வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜே.பி.ஜே. தலைமை இயக்குநர் டத்தோ ஜைலானி ஹஷிம் கூறினார்.

வாகனங்கள் சாலையைப் பயன்படுத்துவதற்கு தகுதியானவைதானா? என்பதை உறுதி செய்ய இந்த அமலாக்க நடவடிக்கை துணை புரியும் என்று அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் புஸ்பாகோம் எனப்படும் கணினி முறை வாகன சோதனை மையத்துடன் இணைந்து வாகன சோதனைக்கான நிலையான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) மேலும் வலுப்படுத்துவதும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

வர்த்தக வாகனங்கள் சாலையைப் பயன்படுத்துவதற்கு தகுதியானவையா என்பதை உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது தொடக்க மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியிலான சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 12வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்குள்ள வங்சா மாஜூ புஸ்பாகோம் மையத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் புஸ்பாகோம் நடவடிக்கைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வர்த்தக வாகன சோதனை நடைமுறைகளை தரம் உயர்த்துவது குறித்தும் ஜே.பி.ஜே. ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

வாகன சோதனைக்கான கால இடைவெளியைக் குறைப்பது, ஜே.பி.ஜே.வின் வாகன பொறியியல் துறையின் புஸ்பாகோம் நடவடிக்கை மீதான தணிக்கையை வாராந்திர அடிப்படையில் மேற்கொள்வது ஆகியவையும் அதில் அடங்கும் என்றார் அவர்.


Pengarang :