ECONOMYHEALTHSELANGOR

இனியும் தாமதம் வேண்டாம்- விரைந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்வீர்- சித்தி மரியா வேண்டுகோள்

ஷா ஆலம், ஆக 9- சிலாங்கூர் அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச மருத்துவ பரிசோதனை திட்டம் நோய்களை தொடக்கத்திலேயே கண்டறிவதற்கு மட்டுமின்றி அந்நோய்கள் மோசமான கட்டத்தை அடைவதை தவிர்க்கவும் உதவுகிறது.

மாநில அரசின் இலவச மருத்துவப் பரிசோதனையில் பங்கேற்க விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக அதற்கான விண்ணப்பத்தை செய்யலாம் என்று பொது சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

நீங்கள் நோய்ப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவரா? உடல் பருமன் பிரச்னை உள்ளதா? உடல் நலம் குறித்து கவலைப்படுகிறீர்களா? முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் சோதனை நோயின் தாக்கம் கடுமையாவதை  தடுக்க உதவுகிறது. ஆகவே இனியும் காத்திருக்க வேண்டாம் என தனது பேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூர் சாரிங் எனும் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தை மாநில அரசு 34 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொண்டு வருகிறது. நோய்ப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உடல் பருமன் பிரச்னையை எதிர்நோக்குவோர், ஆரோக்கிய வாழ்க்கை முறையைப் பின்பற்றாதவர்களை இலக்காக கொண்ட இத்திட்டத்தின் வழி மாநிலத்திலுள்ள சுமார் 39,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மருத்துவ பரிசோதனை தொடர்பான மேல் விபரங்களுக்கு selangorsaring.selangkah.my  எனும் அகப்பக்கம் வழி அல்லது 1-800-22-6600 என்ற எண்களில் செல்கேர் அமைப்பை தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :