ECONOMYSELANGOR

மக்களின் சுகாதாரத்திற்கு முதலாவது சிலாங்கூர் திட்டம் உத்தரவாதமளிக்கிறது

ஷா ஆலம், ஆக 10- மக்களின் சுகாதாரத்திற்கு முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதானது சமூகத்தின் உடலாரோக்கியம் சிறப்பான முறையில் இருப்பதை உறுதி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் ஆக்ககரமான நடவடிக்கையாக அமைந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டு வரும் பல்வேறு நோய்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக மக்களின் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை விரிவுரையாளர் டத்தோ டாக்டர் காலிட் இப்ராஹிம் கூறினார்.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள சுகாதார முன்னெடுப்புகள் மாநில மக்களுக்கு கிடைத்த போனசாக கருதப்படுகிறது. காற்றிலும் நீரிலும் தற்போது ஏற்பட்டுள்ள மாசுபாடு காரணமாக டிங்கி மற்றும் சிக்குன்குன்யா போன்ற நோய்கள் அதிகரித்து வருகின்றன என்று அவர் சொன்னார்.

அதே சமயம், இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், உளவியல் பிரச்னை போன்றவையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நோய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளோடு சிகிச்சைக்கான திட்டங்களையும் முதலாவது சிலாங்கூர் திட்டம் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :